பெண்கள் தினமும் ஒரு நூற்றாண்டும்

வரலாறு : 1910

இவ்வாண்டில் ஜேர்மனிய சோசலிச ஜனநாயகக் கட்சியின் கிளாரா செற்கினால்  முன்மொளியப்பட்டதே சர்வதேச பெண்கள் தினமாகும். ‘இரண்டாவது சர்வதேச பெண் தொழிலாளர் கருத்தரங்கினில்’ வைத்து அவர் இதனை முன் மொளிந்தார். அவரது பரிந்துரையின் படி, ஒவ்வாரு வருடமும் சகல நாடுகளிலும் அந்த குறிப்பிட்ட நாளில் பெண்கள் அந் நாளைக் கொண்டாட வேண்டும்.  அவ் பரிந்துரையை அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த 17 நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், சோசலிசக் கட்சிகள், பெண் தொழிலாளர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக் கொண்டதன் விளைவாய் ‘சர்வதேச பெண்கள் தினம்’ பிறந்தது.

><

1.1

பல ‘பெண்ணியம்’கள்

இன்று ஒரு 100 ஆண்டுகள் கழிந்து விட்டன. எல்லா வெளிகளும் பெண்களுக்காய் விரிந்திருப்பதாய், பெண்கள் சகல துறைகளிலும் – விண்வெளியிலும் வேறு – கால்பதித்து பிரகாசிக்கிறார்கள் என்பதாய், ‘அவர்களுக்கு இனியேது தடை’ “எல்லா உரிமைகளும் தான் பெறப்பட்டு ஆயிற்றே, பிறகென்ன’ எனக் கூறிக் கேட்டிருக்கிறோம்.

ஆயினும் அத்தகு வெளிகள் உருவாகக் காரணமாக இருக்கும், பெண்களின் நலன்களுக்காய்ப் போராடிய, அவற்றை பொதுநீரோட்டத்தில் ‘வலியுறுத்திய‘ அமைப்புகள்  மற்றும் தனிநபர்கள் நம்பிய ‘பெண்ணியம்’ அல்லது ‘பெண்நிலைநோக்கு’ என்பது இன்றும் – இந்த ஒரு நூற்றாண்டின் பின்பும் – பிழையாக விளங்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

இங்கே ஒன்றைத் கூற வேண்டும். பெண்ணியம் என்பதும் விமர்சனத்துக்குஅப்பாற்பட்ட ஒன்று அல்ல, இங்கு தோன்றிய அனைத்து இயங்களையும் போலவே அதிலும் முரண்பாடுகள் உண்டு. அத்துடன் பெண்ணியம் என்று கூறுகின்றபோது, நாம் திட்டவட்டமாக ‘ஒரு’ பெண்ணியத்தை முன் வைத்து பேசவும் முடியாது. ஒரு பெண்ணியம் அல்ல, மாறாக, மார்க்சியப் பெண்ணியம், சோசலிஸப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என  பல்வேறு பெண்ணியம்கள், மாற்றுப் பெண்ணியம்கள் அல்லது பெண்நிலைப் பார்வைகள் இங்கே தோன்றியிருக்கின்றன.  ஒரு கோட்பாட்டிலிருக்கிற போதாமைகள் மேலும் புதியனவைக் கொண்டுவருகின்றன. வர்க்கம், ஜாதி, என சமத்துவமின்மைகள் இருக்க இருக்க இயங்களும் தம் பொதாமைகளை புதிய புதிய தத்துவங்கள் ஊடாக நிரப்ப விழைகின்றன.  ஆனால் நாம் முரண்படக்கூடிய இவ் ஒவ்வொரு இயங்களாலும் விழைந்த ஒரு சில நன்மைகளில் ஏனும் நாம் எல்லோரும் பயனடைந்தவர்களாயே இருப்போம்.

அப்படியிருக்க, அவற்றை நாம் எவ்வாறு புறந் தள்ள முடியும்? ஒட்டுமொத்தமாக எப்படி நிராகரிக்க முடியும்?

சுமார் 100 வருடங்களுக்கு முன் இருந்த அதே விலங்குகள் இன்றும் பெண்களைச் சுற்றியில்லைத்தான். எனினும், துரதிர்ஷ்டவசமாக விலங்குகளின் வடிவங்களே மாறியுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இன்னும் பெண்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது.  சக ஆணொருவருடன் ஒப்பிடுகையில், அவர்கள் சக பிரஜைகளாக சுதந்திரஜீவிகளாக வாழ்வதற்கான தடைகள் இன்றும் நிறைய உள்ளன. இன்றைய பெண்கள்-தின ஒருங்கமைப்பாளர்கள் கூற்றின்படி: ….இன்னும் பெண்கள் ஆண் செய்கிற வேலையை செய்கின்ற போதும் ஆணுக்கு சமமான ஊதியத்தைப் பெறவில்லை.  சரிக்கு சமானமாக அரசியலிலேயோ, வணிகத்திலையோ பெண்கள் இல்லை. பூகோளரீதியாக ஆண்களைவிட பெண்களின் கல்வி, சுகாதாரம், அவர்கள் மீதான வன்முறை என்பன மிக மிக மோசமான நிலையிலேயே உள்ளன.

வரலாறு : 1908:

பெண்களிடையே பெரும் அமைதியின்மையும் அதனால் தீவிர விவாதங்களும் ஏற்படுகின்றன. சமூகத்திலிருக்கிற பெண் ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மை என்பன பெண்களை மாற்றங் குறித்து இன்னும் வலுவாகத் தம் குரலை எழுப்பவும், அதை எதிர்த்து இயங்கி மாற்றத்துக்காக பிரச்சாரங்கள் செய்யவும் உந்துகின்றன.  இவ்வாண்டில் சுமார் 15 000 பெண்கள் நியூ யோர்க் மாநகரத்தில் அணிவகுத்துச் செல்கிறார்கள். குறைந்த வேலை நேரம், உரிய சம்பளம், வாக்குரிமைக் கோரிக்கைகளுடன்.

><

1.2 பெண்ணியத்தின் வீழ்ச்சி – புதிய தலைமுறையின் ஈடுபாடின்மை

1960 – 70களில், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு “பெண்கள் நாள்” பெரும் கிளர்ச்சியின் அடையாளம், விடுதலையின் உற்சவம் – மகா திருவிழா.  கருப்பை உரிமைகள், குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் வருகை (The birth control Pill), வாக்குரிமை, பாலியல் தேர்வு சுதந்திரம், (வியட்நாம்) யுத்த எதிர்ப்பு… அவர்களுடைய இளமைக் காலம் தமது உரிமைகளுக்காக மனிதநேயத்துக்காக எனப் போராடும் பெரும் சக்தியை கொண்டிருந்தது. அரசியல்மயப்பட்டிருந்தது. பெண்ணிலைப் பார்வையை அதன் தேவையை அங்கீகரித்த அக் காலத்துப் பெண்களும் ஆண்களும் “பெண்ணியம்” என்கிற கருத்தியலை மிக ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொண்டார்கள்; அது மனித இனத்தின் சக நபராய், ஒரு ஒடுக்கப்பட்ட பாலின் விடுதலையைப் பேசியதாய் மதித்தார்கள்.

வியாபார உலகினது எழுச்சியில், படிப்படியாக அன்று பலம்பெற்றிருந்த அமைப்புகளது, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்படும் குரல்களது இயக்கங்களது, வலுக் குறைகிறது (அவற்றுக்கான சமூக ஆதரவு குறைகிறது). சிறு சிறு குழுக்களாக குறைந்த பிறகு அவை சில தனிநபர்களாகச் சுருங்கி, தம் ஒருங்கிணைந்த இயங்கு சக்தியை (அதன் பலத்தை) இழக்கலாயின…

70களில் இந்தக் ‘கனடிய’த் தெருக்களை நிரப்பிய பெண்கள் இன்று அங்கலாய்க்கிறார்கள், “எவ்வாறு இந்த வருகையாளர்கள் குறைந்தார்கள், இளம் பெண்கள் ஏன் பெண்ணியத்தின்பால் ஆர்வமற்றுப் போனார்கள், எப்படி அவர்கள்  ஊடகங்களது அடிமைகளாகிப் போனர்கள்… எப்படி அவர்கள் சதா தம் அழகு குறித்தே சிந்திப்பவர்களாய் ஆனார்கள். தம் அறிவைச் சுருக்கிக் கொண்டார்கள்!” என்பன குறித்து..  ஒரு வியாபார உலகம் எல்லாவற்றையும் வென்றுவிட்டது, பெண்களது செயல்த்திறனை ‘வாங்கி’விட்டது. பெண்ணைப் போகப் பொருளாக பார்க்காதே என கோசம் எழுப்பியவாறு செல்கிற இன்றைய தெருக்கள் நெடுகிலும் விளம்பரப் பலகைகளில் பெண்கள் போகப் பொருட்களாய் மட்டுமே நிற்கிறார்கள்.

வரலாறு : 1911 :

சர்வதேச பெண் தொழிலாளர்கள் கருத்தரங்கினில் முன்மொளியப்பட்ட பிற்பாடு முதல்முதலாக சர்வதேச பெண்கள் தினம் அவுஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிற்சலாந்து ஆகிய இடங்களில் மார்ச் 19 இடம்பெற்றது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பெண்களும் ஆண்களும் பெண்களது உரிமைகள் வேண்டியும் பாகுபாடுகளை நிறுத்தவும் அணிதிரண்டார்கள். இது நடந்து ஒரு வாரமும் சில தினங்களும் ஆன பிறகு, மார்ச் 25, துயர்மிகுந்த சம்பவம் ஒன்று நியூ யோர்க் நகரில் இடம்பெற்றது. தொடர்மாடி கட்டிடமொன்றிலிருந்த ஒரு தொழிற்சாலையில் தீப்பிடித்துக் கொள்ள, தொழிலாளர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிராத அத் தொழிற்சாலையின் வெளியேறுவதற்கான கதவுகள் மூடப்பட்டிருக்க, தப்பவியலாது 140க்கு மேற்பட்ட தொழிலாளர்களது உயிரை தீ எடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனேகமானவர்கள் இத்தாலிய மற்றும் யூத பெண்கள் ஆவர். “Triangle Fire” எனப்படும் இத் தீவிபத்துச் சம்பவம் அமெரிக்காவின் வேலைத்தள பாதுகாப்பற்ற நிலைகள், தொழிலாளர் சட்டங்கள் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியதுடன் பிறகான பெண்கள்-தின நிகழ்வுகளின் முக்கிய கருப்பொருளாகவும் ஆகியது. இவ்வருட இறுதிகளில் “பாணும் பூக்களும்” (“Bread & Roses”)என அறியப்படுகின்ற (பெரும்பாலும் பெண்களாலான தொழிற்சாலைத்) தொழிலாளர்களது வேலைநிறுத்தமும் பரந்தளவில் அறியப்பட்டதும், தொழிலாளர் வரலாற்றில் பேசப்படுவதும் ஆகும்.

1913-1914:

முதலாம் உலக யுத்தத்தின் தொடக்கம். பெண்கள் யுத்தத்திற்கு எதிராக அணிதிரண்டார்கள். யுத்தத்துக்கு எதிராகவும் பெண்களது ஒருங்கிணைவை வெளிப்படுத்துவதாகவும் பேரணிகள் ஐரோப்பா முழுவதும் இடம்பெற்றன.

1917:

போரினில் இரண்டு மில்லியனுக்கும் மேலான உருஷ்யப் படையினர் இறந்ததை அடுத்து, பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு உருஷ்யப் பெண்கள் “பாணும் சமாதானமும்” (“bread and peace”) வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.   அரசியல்த் தலைவர்களது எதிர்ப்புக்குள்ளும் பெண்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பிறகு உருஷ்சிய தேசம் தனது அதிகாரத்தை வேறு வழியற்றுக் கைவிட வேண்டியும் வந்தது. பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள். பெண்களது வேலை நிறுத்தம் தொடங்கிய திகதியானது அப்போது உருஷ்சியாவில் பாவனையிலிருந்த ஜீலியன் கலெண்டரின் அடிப்படையில் 23 பெப்ரவரி 1917 ஆகும் ஆனால் கிறகோரியன் கலெண்டர் பாவனையிலிருந்த ஏனைய இடங்களில் அது மார்ச் 8.

1918 – 1999

சோசலிச இயக்கத்தினூடாக அதன் பிறப்பு நிகழ்ந்த பிற்பாடு, பெண்கள் தினம் ஒரு சர்வதேச தினமாக கவனத்தையும் கொண்டாட்டத்தையும் கொண்டதாய் சகல நாடுகளிலும் வளர்ச்சியடைந்திருக்கின்றது. மேலும்: பெண்களின் வளர்ச்சியை கெளரவிக்கவும், வாழ்வின் சகல கூறுகளிலும் பெண் சமத்துவம் மிளிர, செய்ய வேண்டியிருக்கிற வேலைகளை முன்னெடுத்தச் செல்லவும் வருடாவருடம் பல அமைப்புகள், அரசுகள் பெரியளவில் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்கின்றன.

2000:

சீனா, அர்மீனியா, ருஷ்யா, பல்கேரியா, கஸக்ஷ்ரான், கிர்கிஸ்ரான், மாசீடொனியா, மொல்டோவா, மொங்கோலியுர், இரஜிக்ஸ்ரான், உக்ரேன், உஸ்பேகிஷ்ரான், வியட்னாம் போன்ற நாடுகளில் தேசிய விடுமுறை நாள். இந்த நாளில் ஆண்கள் தமது தாய், மனைவி, பெண் நண்பர்கள், சக பெண் வேலையாட்களுக்கு தம் மதிப்பைத் தெரிவிக்க மலர்களையோ சிறிய பரிசுகளையோ வழங்குவதை மரபாகக் கொண்டிருக்கின்றார்கள். சில நாடுகளில், அன்னையர் தினத்துக்குச் சமனானதாய், பிள்ளைகள் தமது தாய்மாருக்கும் பாட்டிமார்களுக்கும் சிறு பரிசுகளை வழங்கும் தினமாக மதிக்கப்படுகின்றது.

><

இன்று நாம் அனுபவிக்கிற அனைத்து உரிமைகளும் எமக்கு எம் மூதாதையர்களால் பெற்றுத் தரப்பட்டதே. இதை எந்த தலைமுறையும் மறந்துவிடலாகாது. அந்த அடிப்படையே பெண்களது நாளைக் கொண்டாடுவதற்கான அடிப்படையுமாகும்.  தங்களை இரண்டாவது பிரஜைகளாக நடத்திய சமூகத்தில் அதை மாற்ற உழைத்த பல்வேறு வர்க்கங்களை கருத்தியல்களைக் கொண்டிருந்த (கொண்டிருந்ததால் இன்று நாம் முரண்படவும் செய்கிற) அந்தப் பெண்களை, தமது விடுதலைக்காகப் போராடி பெற்றவற்றை பிறகான தலைமுறைக்கும் விட்டுச் சென்ற அந்த செயற்பாட்டாளர்கள், பெண்ணிலைவாதிகள் மதிப்புடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களே. வாக்குரிமை, கல்வியுரிமை, சொத்துரிமை… என பெண்-பாலை பொதுஓட்டத்தினுள் ‘உள்ளெடுத்துக்’கொள்ள போராடியவர்கள் அல்லவா?!

கனடாவிலும் வருடாவருடம் பெண்கள் தினம் டவுண்ரவுண் நகரில் பல்தரப்பட்ட நிகழ்ச்சிகளுடன், நெடும் பேரணியுடன் இடம்பெற்று வருகிறது. சென்ற வருடம் மட்டும் பெண்கள் தினம் ஸ்காபரோ தொழிலாளர் வட்டம் (Scarborough Workers’ Circle) எனும் தமிழ் தொழிலாளர் அமைப்பினால் ஸ்காபரோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. கடந்த வருட அதன் நிகழ்வில் முதியவர்களைக் கொண்ட ஒரு நடனத்தை ஒருங்கிணைத்திருந்த நடன ஆசிரியை மாலினி கூறியது போல “ஆண்களை அல்ல ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்” என்பதை இந் நாளுக்கான ஓர் பிரகடனமாய்க் கூற முடியும்.

எல்லா தினங்களும் வணிகமயப்படுத்தப்பட்டதை கண்டு சலிப்புற்ற ஒரு வயதில், பெண்கள் நாளும் அப்படியொன்றுதானே என்று சலித்திருந்தது மனம். ஆனால், வீதியில் ஒருநாள் பல்தரப்பட்ட சிறு சமூக வேலைகளை இயக்கங்களைச் சேர்ந்த சிறு சமூக மாற்றங்களை நடத்தும் மனிதர்களுடன், பெண்களுடன் இறங்கி அவர்களுள் ஒருத்தியாக நடக்க தொடங்கிய போது, அந்த இணைவு தந்த கிளர்ச்சியில், அத்தகு சலிப்புணர்வுகள் காணாமற் போய் விட்டன.  இணைந்திருத்தலின் பலம்! இணைந்து ஒலித்தலின் பலம்! சிறு சிறு முரண்பாடுகளை தவிர்த்து, பெண்களது இவ்வளவு கால பயணத்தின் (போராட்டங்களின்) பிரதிபலன்களை கொண்டாடுதலின் நெகிழ்ச்சி! இந்த ஒருங்கிணைவே ஒரு விடுதலைக்கான பலம்.

கவனத்துக்குரிய இன்னொரு விடயம், இங்கே (அமெரிக்காவில்) வலன்ரைனஸ் டே (காதலர் தினம்) போலவோ கிறிஸ்துமஸ் தினம் போலவோ (குறிப்பாக மேற்கு நாடுகளில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில்) வியாபாரிகள் பெண்கள் தினத்தைப் பிரகடனப்படுத்துவதில்லை. அடிப்படையிலேயே அது ஒரு விதிவிலக்கு.   புரட்சிகரமான கோசங்களைக் கொண்ட பெண் விழிப்புணர்வைத் தூண்டும் ரீ-சேர்ட்டுகள் விற்பனை அங்காடிகளை நிரப்புவதில்லை. (முறையே) தமது தாய், தங்கை, தோழிகள், காதலருக்கான பரிசுகளை வாங்க ஆண்கள் கடைசீ நேரத்தில் (பூவெல்லாம் முடிந்த கடைகளில் ஏறி இறங்கி,) மாய  வேண்டியதில்லை. பெறும் நிலையில் பெண்களும் இருக்க வேண்டியதில்லை.

மேற்குறிப்பிட்டது போல, ‘வளரும்’ நாடுகள் என மேற்கினால் அழைக்கப்படுகிற நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகளில் பெண்கள் தினம் ஒரு விடுமுறை நாள். அன்று நிச்சயமாக ஆண்கள் தமது பெண்களை மரியாதை செய்யும் விதமாக பரிசுகளைக் கொண்டு செல்லும் பாரம்பரியம் இருக்கிறது.

பெண்கள் தினத்தின் 100 வருட கருப்பொருட்களைப் பார்த்தோமாயின், அதன் மைய்யம் மனிதர்களது வாழ்வுக்கான அன்றாட தேவைகளையும் உயிர்ப்பையும் மனங்கொண்டதாய் இருக்கக் காணலாம்.  யுத்தத்தை எதிர்த்தும் வாழ்வதற்கான உரிமைகளை வேண்டியும் அவர்கள் வன்முறைக்கெதிரான, வாழ்வுக்கெதிரான தமது குரலை பதிவு செய்திருப்பதைக் காணலாம்.

பாலினங்கள் தங்களை ஒருத்தரை ஒருத்தர் இழிவு செய்யாத, அவரவர் சுயமரியாதையை மதிக்கின்ற, சகலவிதமான சமத்துவமின்மைகளுக்கும் பழகிப் போகாதவாறு, அவற்றை அடையாளங் கண்டு-எதிர்க்கிற, ஒரு சமத்துவக் கனவிலேயே வாழ்வின் உயிர்ப்பு எஞ்சியுள்ளது. அந்தக் கனவுகளை நாம் கடத்துகின்ற எமது பிள்ளைகள்-காதல்த் துணைகள்-ஆண் நண்பர்கள் தாமறிந்த தோழமைப் பெண்களைத் தேடி, அழைத்து “அம்மா! தங்கா! தோழி! கண்மணி! மகளே! இது உன்னுடைய தினம், வீட்டை விட்டு வா. இதனைக் கொண்டாடுவோம்.” “வீட்டை விட்டுப் போ, இதனைக் கொண்டாடு” இவ்வாறு கூறி தம் வாழ்வின் இனிமையை மீட்டெடுக்கலாம். அதுவரை சிறிய கூட்டங்களாக ஏனும் பெண்நிலைக் கருத்தியலை அதன் வெற்றிகளை நினைவுகூர்ந்து, ஏனையவற்றுடன் அதனதும் தவறுகளை விமர்சித்து, அறிவைப் பரப்பி, அந்தக் கனவை மென் மேலும் வளர்த்துச் செல்வோமாக.

வரலாறு : 2011 :

பெண்கள் தினத்தை கொண்டாடத் தொடங்கி, ஒரு நூற்றாண்டு காலம் முடிந்து போயிருக்கிறது. 1911இல் நிகழ்ந்த பெண்கள் தினப் பேரணியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

><

குறிப்பு: வரலாற்றுத் தகவல்கள் பெறப்பட்டது: சர்வதேச பெண்கள் தின – இணையத் தளம் www.internationalwomensday.com/iwd_factsheet.pdf

Photos: Sathya: ‘a family at the IWD rally 2011’ and the other , Toronto Downtowne

நன்றி: ‘தாய்வீடு’ – Published in ‘Thaiveedu’ NewsMonthly’s April Issue

This entry was posted in தமிழில்..., Media REforms and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a comment